Saturday, 27 September 2014

பிரசவத்துக்கு பின் சந்திக்கும் இடர்கள்

பிரசவத்துக்கு பின் சந்திக்கும் இடர்கள்

கருவுறுதல் என்பது பெண்களின் உடலில் பெரும் மாற்றங்களை கொண்டு வருகின்றது. இதனால் மன அழுத்தம் மற்றும் கவலைகளும் ஏற்படுகின்றன. ஒரு சில சமயங்களில் குழந்தை பெற்ற பின்பும் அந்த மன அழுத்தம் நம்மை விட்டு அகல்வதில்லை.
குழந்தையுடன் இருப்பது பெரும் சந்தோஷத்தையும் இதுவரை நீங்கள் சந்திக்காத பரவசத்தையும் தரக்கூடும். ஆனால் எப்போதும் செய்யும் காரியங்களை தவிர்த்து குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது பதற்றம், விரக்தி, சக்தியெல்லாம் தீர்ந்தது போல் உணர்வீர்கள். பொதுவாக குழந்தை பெற்ற முதல் சில மாதங்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
இத்தகைய அழுத்தத்திலிருந்து தப்பிக்க நாம் முன் யோசனையாக சில முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை தவிர்ப்பது பிறக்கப் போகும் குழந்தையின் மன நிலையை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும். குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்ப்பது குழந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள உதவும்.
• குழந்தை பராமரிப்பு செய்யும் போது நாம் சாப்பிட வேண்டிய உணவை சரியான நேரத்தில் உண்ண முடியாமல் போகின்றது. அந்த நேரத்தையும் குழந்தைக்காவே செலவு செய்கின்றோம். இது போன்ற தருணங்களில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நமது உடம்பை நாம் எப்போதும் ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியமானதாகும். இதுவும் குழந்தைப் பேறுக்கு பின் வரும் மன அழுத்தத்தை தடுக்க உதவும்.
• குழந்தையுடன் அதிக நேரத்தை செலவு செய்யும் போது மகப்பேறுக்கு பின்வரும் மன அழுத்தம் பெருமளவு குறைகிறது. இந்த செயல் நம் குழந்தையுடனான இணைப்பை மேலும் வலுவூட்டி மனதையும் அமைதிப்படுத்தும்.
• மிகவும் சோர்ந்து போன சூழலில் உங்கள் நண்பர்களுடனோ அல்லது கணவருடனோ வெளியே சென்று வரலாம். இச்செயல் உங்களை மிகவும் மகிழ்விக்கும். குழந்தையை எடுத்து செல்ல முடியாத நிலையில் உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களின் உதவியை நாடி சிறிது நேரம் இளைப்பாரலாம்.
• குழந்தை பெறுவது பெண்களின் உடலின் அமைப்பை மாற்றி விடுகிறது. முதலில் ஒரு அழகு நிலையத்திற்கு சென்று சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு புத்துணர்வூட்டும். உங்களுக்கு தேவையான ஆடைகளையும், மற்ற அணிகலன்களை வாங்கி அணிவது உங்களுடைய நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். உங்கள் சுய மரியாதையையும் அதிகப்படுத்தும். இந்த வழி மிகவும் சிறந்த வழியாக அமைகின்றது.
• உங்கள் கணவருடன் சில வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு இரவு உங்கள் கணவரை பார்த்துக் கொள்ள வைப்பது அல்லது குழந்தைக்கு டையாபர்களை மாற்றுவது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்லாம். இவ்வாறு செய்வதால் உங்களிருவரின் உறவில் அன்பு மிகுதியாகும் மற்றும் மன அழுத்தமும் குறையும்.
• குழந்தை பிறந்த பின் உடல் ஆரோக்கிய நிலையை அடைந்ததும் தியானம் அல்லது யோகாசனம ஆகிய பயிற்சிகளை செய்யலாம். இது குழந்தை பிறந்த பின் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து சரும பொலிவையும் கொடுக்கும். இதுவே அழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக அமைகின்றது.
• உங்கள் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். இது உங்களை மகிழ்ச்சியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வைக்கும். உங்கள குழந்தையின் புகைப்படங்களை ஆகியவற்றை சமூக வலைத்தளங்கள் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழுங்கள். அவர்களை சந்தித்து சிறிது நேரம் செலவிடுதல் புத்துணர்வூட்டும்.
இந்த வழிகளை எல்லாம் பின்பற்றி குழந்தை பெற்ற பின் ஏற்படும் மன அழுத்தத்தை மகிழ்ச்சியாக மாற்றி தன்னம்பிக்கையும் பெறலாம்.

No comments:

Post a Comment